,

Mahabharatham மஹாபாரதம்

1,500.00

மகாபாரதத்தில் மானுட மேன்மைகளை சொல்லும் கதாபாத்திரங்களும் உண்டு! மானுடத்தின் இழிவைச் சொல்லும் – அநீதி இழைப்பதில் உச்சம் தொட்ட – கதாபாத்திரங்களும் உண்டு! அன்பு, கருணை, கொடை வன்மை, பெருந்தன்மை, இரக்கம், வீரம், வீராப்பு, துரோகம், வெறுப்பு, வன்மம், ஆணவம், சஞ்சலம், சிறுமை…என எத்தனைவிதமான உணர்வுகள் கொண்ட கதாபாத்திரங்கள் இதில் உலவுகின்றன! கதை, கதைக்குள் கதைகள்…என விரிந்து கொண்டே செல்லும் மகாபாரத்தை குழப்பமில்லாமல் எளிமையாக புரிந்து கொள்ளத்தக்க வகையில் மிகச் சுவையாக எழுதியுள்ளார் வழக்கறிஞர் பசுபதி தன்ராஜ்!

மகாபாரதத்தை எத்தனையோ பேர் எழுதியுள்ளனர். எத்தனை முறை படித்தாலும் சலிக்காது! அதில் விவரிக்கப்படும் பல்வேறு குணாம்சங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் இன்றைய சமூகத்திலும் காணக் கிடைக்கின்றனர் என்பதே அதன் வெற்றிக்கு காரணம்! ஆனால், பாரதக் கதைகள் நெடுகிலும் பார்ப்பனர் மேன்மையே விதந்தோதப்படுகிறதே…ஏன்?

மகாபாரதத்தில் மானுட மேன்மைகளை சொல்லும் கதாபாத்திரங்களும் உண்டு! மானுடத்தின் இழிவைச் சொல்லும் – அநீதி இழைப்பதில் உச்சம் தொட்ட – கதாபாத்திரங்களும் உண்டு! அன்பு, கருணை, கொடை வன்மை, பெருந்தன்மை, இரக்கம், வீரம், வீராப்பு, துரோகம், வெறுப்பு, வன்மம், ஆணவம், சஞ்சலம், சிறுமை…என எத்தனைவிதமான உணர்வுகள் கொண்ட கதாபாத்திரங்கள் இதில் உலவுகின்றன! கதை, கதைக்குள் கதைகள்…என விரிந்து கொண்டே செல்லும் மகாபாரத்தை குழப்பமில்லாமல் எளிமையாக புரிந்து கொள்ளத்தக்க வகையில் மிகச் சுவையாக எழுதியுள்ளார் வழக்கறிஞர் பசுபதி தன்ராஜ்!

ஆர்த்தி என்ற ரிஷி தான் அனைவருக்கும் மூலவர் அவரது வம்சத்தில் 13 வது நபராக வருபவர் பீஸ்மரின் தந்தை சாந்தனு! முதல் மனைவி கங்கையின் மைந்தன். இரண்டாவது மனைவி சத்தியவதி வழி மூலமாக உருவாகும் விசித்திர வீரியன் வம்சத்தின் வழி விரிபவர்களே மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்! அவர் மகன்கள் திருதராஷ்டிரன், பாண்டு முதலானோர்!

பாண்டுவின் வம்சத்தவர்களே பாண்டவர்கள்! திருதராஷ்டிரன் வம்சத்தவர்களே கெளரவர்கள்! இப்படி மகாபாரதத்தின் 160க்கும் மேற்பட்ட  முக்கிய கதாபாத்திரங்களை வம்சா வழியில் இன்னாரில் இருந்து இன்னின்னார் என வாழையடி வாழையாக ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உறவுப் பின்னலை மிக அழகாக நவீன வழிமுறையில் சார்ட் போட்டு வரிசைப்படுத்தி இருக்கும் நேர்த்தியை என்னென்பது…! (  இன்றைய நம் தலைமுறைக்கு தாத்தாவிற்கு அப்பா யார் என்று கேட்டாலே தெரிவதில்லை)

முதலில் இந்த சார்ட்டை வாசிப்பதே ஒரு சிறந்த அனுபவமாகிவிடுகின்றது! கிருஷ்ணருக்கு இரண்டு மனைவிகள் மூலம் இரண்டு மகன்கள்! என அவர்களின் பெயர் பிரதியும்னன், சாம்பன் என்றும், பிரதியும்னன் மகன் அநிருத்தன் என்றும் அறிய நேரும் போது வியப்பு ஏற்படுகிறது!

மகாபாரதம் பதினெட்டு பருவங்கள் கொண்டது! அதற்கு அதி அற்புதமாக உருவம் கொடுத்திருப்பதே எழுத்தாளர் பசுபதி தன்ராஜுன் சிறப்பு! இதை மூன்று பெரும் நூல்களாக யாத்துள்ளார் ஆசிரியர்! துவக்க நிகழ்ச்சிகளைச் சொல்லும் ஆதி பருவம், சூதாட்ட பகுதியை விவரிக்கும் சபா பருவம், நிர்கதியாக காடுகளில் அலைந்து திரிந்து, துன்புற்று உழல்வதை சொல்கிறது வனபருவம். இந்த மூன்றையும் முதல் நூல் விவரிக்கிறது!

இரண்டாவது நூல் வீராட பருவத்தை சொல்கிறது! இதில் அகதியராய் சென்று வீராடரின் அரண்மனையில் ஓராண்டுகள் தங்கியதும், பின் அதிதியராய்த் திரும்பியது வரையும் மிக சுவையாக விவரிக்கப்படுகின்றன!

மூன்றாவது நூல் துரோண பருவமான குருஷேத்திர போரை அணுவணுவாக விவரித்துச் சொல்கிறது. இது வன்முறையின் உச்சம் தொட்ட பகுதியாகும்.

பசுபதி தன்ராஜுவின் சிறப்பே கதை சொல்வதில் இருக்கும் ஒரு ஒழுங்கு முறை தான்! காட்சிகளை, சம்பவங்களை விவரிப்பதில் வந்து அருவி போல கொட்டும் வசனக் கவிதை போன்ற சுகமான வார்த்தைகள்… நம்மை கட்டிப் போட்டுவிடுகின்றன!

இதோ அவரது கதை சொல்லும் பாங்கை பாருங்கள்! கர்ணனுக்கு ஆதரவாக துரியோதணன் பேசும் பகுதி!

பீமன் இடி இடித்தார் போல நகைத்தான்! ‘’நன்று, நன்று! தேரோட்டியின் மகன் நாடாள்வதா..? அவனது கையில் சவுக்கை தாருங்கள், தேரினை ஓட்டட்டும்’’. என்றான்.

பீமனைப் பார்த்து துரியோதனன் சொன்னான்; ஓ! விருகோதரா, கேவலமாக இனத்தைப் பற்றிப் பேசாதே..! ஷத்திரியனின் பெருமை பலத்தில் தான் உள்ளது. குலத்தில் இல்லை. நதி மூலம் அறிய முடியாதது! உலகை எரித்திடும் தீயும் நீரில் அணைந்திடும். பிறப்பில் என்ன பேதம் கண்டாய்? விஸ்வாமித்திரர் பிறப்பால் ஷத்திரியர். வாழ்வியல் முறையால் பிராமணர். துரோணர் பிறப்பால் அந்தணர், ஆயுதக் கலையில் அவர் ஒரு ஷத்திரியர். நாணல் தண்டிலே ஜனித்த கிருபர் நம் நல்லாசிரியர் அல்லவா..?’’ என்கிறான்.

விஸ்வாமித்திரர் மேனகையின் அழகில் மயங்கும் பகுதி கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகிறது.

மேனகை கண்டவர் களித்திடும் காமக் கன்னி, அறிவார்ந்த ஆண்களிடம் அடங்கிய ஆண்மையை தட்டி எழுப்பிடும் ஆற்றல் கொண்டவர்.  தனது அங்கங்களில் அழகு கொஞ்சிடும் ஆடலணங்கு! மிஞ்சிடும் அவள் மேனியழகு, பஞ்சினைத் தீயில் பற்ற வைக்கும் தகமை கொண்டது. அறிவின் மிகுதியோ, வயதின் பட்டறிவோ தன் நிலை மறந்து அவளின் அடிமைகளாக உருவெடுக்கும்.

தவ முனிவர் தடுமாறினார். புலனடக்கம் புதைகுழிக்கு சென்றது. பகுத்தறிவு பதுங்கிக் கொண்டது. புத்தியின் வலிவு ஓய்வெடுக்கச் சென்றது. உண்மைகள் உறங்கப் போயின; உணர்வுகளே வென்றன. ஞனப் பெருமுனி தன் மோன நிலையை உணர்ந்தார். மோக நிலையில் முடங்கினர்;

பொதுவாக மகாபாரதம் வாழ்க்கை பற்றிய பல புரிதல்களை நமக்கு தந்தாலும் அதன் ஊடு பொருளாக பாவி நிற்பது பிராமணர்கள் வணங்கத்தக்கவர்கள், வழிபாட்டுக்குரிய மேலோர் என்பதாகும். கதை நெடுகிலும் இது வலியுறுத்தப்படுகிறது!

பிராமண குருவுக்கு மன்னனே கட்டுப்பட்டவன். மன்னனை தண்டிக்க பிராமணருக்கு அதிகாரமுண்டு என்பதை விளக்குகிறது மன்னன் யயாதி தன் மகள் சர்மிஷ்டயை பணிப் பெண்ணாக பிராமண குரு சுக்கிராச்சாரியின் மகள் தேவயானிக்கு அனுப்பியமையாகும்! இந்தப்படி பிராமணனுக்கு அரசர்களே அடிமைச் சேவகம் செய்வதை நியாயப்படுத்தும் மகாபாரதத்தை ஐந்தாவது வேதமாகக் கொள்ளலாம் என சிலர் கூறுவதும் கவனிக்கத்தக்கது.

மகாபாரதக் கதைகள் நமக்கு பல படிப்பினைகள் தருகின்றன! அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி உலகமும், மனிதர் தம் உணர்வுகளும் ஒன்று போலவே உள்ளன என்பதை சொல்கின்றன! இதில் உள்ள பல கதைகள் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன! அதே சமயம் பார்ப்பனர்களே நம்மை வழி நடத்தக் கூடிய வாழ்வியல் ஆசான்கள் என்பதை வலியுறுத்துவதை காண முடிகிறது!

மூன்று தொகுதியாக A4 அளவில் கெட்டி அட்டையுடன், மிகத் தரமாக, நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன!

மகாபாரத்தை சுவைபட கோர்வையாக சொல்லிய விதத்தில் பசுபதி தன்ராஜ் பெரும் வெற்றி பெற்றுள்ளார்!

பக்கங்கள் -1808 ( மூன்று புத்தகங்கள்)

விலை ரூ 1,500